ஆடி அமாவாசையையொட்டி, தடையை மீறி மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஆடி அமாவாசையையொட்டி, தடையை மீறி மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2021-08-08 15:47 GMT
கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டு அருகே உப்புத்துறை கிராமத்தில் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. வருடம்தோறும் ஆடி அமாவாசை அன்று இந்த கோவில்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவிற்கு மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி உப்புத்துறை கருப்பசாமி கோவிலும் மூடப்பட்டது. 
நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தடையை மீறி ஏராளமான பக்தர்கள் வேன் மற்றும் கார்களில் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலுக்கு வந்தனர். இதனையடுத்து கொம்புக்காரன்புலியூர் வனத்துறை சோதனை சாவடியில் கடமலைக்குண்டு போலீசார் நின்று கொண்டு கோவிலுக்கு செல்வதற்காக வந்த வாகனங்களை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர். இதனால் கோவிலுக்கு வந்திருந்த சிலர் சோதனைச்சாவடி அருகே வாகனங்களை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் இருந்த தனியார் தோட்டங்களில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி சென்றனர். ஆனால் பெரும்பாலானோர் பொய்யான காரணங்களை கூறி விட்டு வாகனங்களில் தடையை மீறி மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு கோவில் பூட்டப்பட்டிருந்தாலும் பக்தர்களின் வருகை அதிகளவில் காணப்பட்டது. குறைந்த அளவிலான போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பக்தர்களின் வருகையை போலீசாரால் தடுக்க முடியவில்லை. மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்களில் பெரும்பாலானோர் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததாலும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்