தேனி மாவட்ட வரலாற்றை பிரதிபலிக்கும் அரசு அருங்காட்சியகம்
ஆண்டிப்பட்டியில் தேனி மாவட்ட வரலாற்றை பிரதிபலிக்கும் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி:
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அரவணைப்பில், இயற்கை எழில் கொஞ்சும் பூமியாக தேனி மாவட்டம் திகழ்கிறது. இங்குள்ள ஆண்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நட்சத்திர ஓட்டல் போன்று, தேனி மாவட்டத்தின் வரலாற்றை பதிவு செய்யும் வகையில் தமிழக அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 2 மாடிகளை கொண்ட இந்த அருங்காட்சியகம் தேனி மாவட்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையிலும், இயற்கை, அரசியல், சமூகம், கலை இலக்கியம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றை விளக்கும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான வரலாற்று சான்றாக உள்ள கல்வெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழக மக்களின் வாழ்க்கை, வீரம் போன்றவற்றை விளக்கும் விதமாக உள்ள நடுகல்லும், தஞ்சை மன்னர்கள், மருது சகோதரர்கள் பயன்படுத்திய போர் கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் விளையும் காய்கறிகள், ஏலக்காய், காபி, தேயிலை உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் குறித்த விவரங்களும், மேகமலை வனச்சரகத்தில் உள்ள உயிரினங்களின் பதப்படுத்தப்பட்ட எலும்புகள், முதுமக்கள் தாழி, அக்கால, இக்கால இசைக்கருவிகள் போன்றவையும் இடம் பெற்றிருக்கிறது. இந்த அருங்காட்சியகம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் ஒரு அங்கமாக விளங்கும் இந்த அருங்காட்சியகம், ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்கதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.