குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை இடிக்க கூறியதால்; மந்திரி - எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் மோதல்
குடிநீர் மையத்தை இடிக்க கூறியதால் மந்திரி எம்.டி.பி.நாகராஜ், சரத் பச்சேகவுடா எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெங்களூரு அருகே பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: குடிநீர் மையத்தை இடிக்க கூறியதால் மந்திரி எம்.டி.பி.நாகராஜ், சரத் பச்சேகவுடா எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெங்களூரு அருகே பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
சரத் பச்சேகவுடா எம்.எல்.ஏ.
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சரத் பச்சேகவுடா. பா.ஜனதாவில் இருந்த இவருக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் மறுக்கப்பட்டதால், எம்.டி.பி. நாகராஜிக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் காங்கிரசில் இணைந்தார். அவருக்கும், மந்திரி எம்.டி.பி.நாகராஜிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது.
தொகுதியில் நடக்கும் வளர்ச்சி பணிகளுக்கான நிகழ்ச்சிக்கு தன்னை அழைப்பது இல்லை என்று எம்.டி.பி. நாகராஜ் மீது சரத் பச்சேகவுடா குற்றச்சாட்டு கூறினார்.
ஆதரவாளர்கள் மோதல்
இந்த நிலையில் ஒசக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட சித்தாப்புரா கிராமத்தில் சரத் பச்சேகவுடா தனது தொகுதியில் இருந்து குடிநீர் சுத்திகரிப்பு மையம் கட்டி இருந்தார். இந்த நிலையில் நேற்று குடிநீர் சுத்திகரிப்பு மையம் அருகே சென்ற எம்.டி.பி.நாகராஜின் ஆதரவாளர்கள் குடிநீர் சுத்திகரிப்பு மையம் சாலையை மறித்து கட்டப்பட்டு உள்ளதாகவும், இதனால் அந்த மையத்தை இடிக்க வேண்டும் என்றும் கூறினர். இதற்கு சரத் பச்சேகவுடா எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் எம்.டி.பி.நாகராஜ், சரத் பச்சேகவுடாவின் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் உண்டானது. சிறிது நேரத்தில் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். இதுபற்றி அறிந்த அனுகொண்டனஹள்ளி போலீசார் அங்கு சென்று மோதலில் ஈடுபட்ட 2 பேரின் ஆதரவாளர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் மோதல் சம்பவம் குறித்து இருதரப்பினர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.