கர்நாடகத்தில் 8 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு அமல்
கர்நாடகத்தில் 8 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனால் மதியம் 2 மணிக்கு மேல் கடைகள் மூடப்பட்டன. முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டன. மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
பெங்களூரு: கர்நாடகத்தில் 8 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனால் மதியம் 2 மணிக்கு மேல் கடைகள் மூடப்பட்டன. முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டன. மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
வார இறுதி ஊரடங்கு
கேரளா, மராட்டியத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் கொரோனா 3-வது அலையை தடுக்கும் நடவடிக்கையாக கேரளா எல்லையில் உள்ள குடகு, மைசூரு, தட்சிண கன்னடா, சாம்ராஜ்நகர், மராட்டிய எல்லையில் உள்ள பெலகாவி, விஜயாப்புரா, கலபுரகி, பீதர் ஆகிய 8 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கை கர்நாடக அரசு அமல்படுத்தி நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
அதன்படி நேற்று 8 மாவட்டங்களிலும் முதல் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்ல காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த 8 மாவட்டங்களிலும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்ல மக்கள் குவிந்தனர். மதியம் 2 மணிக்கு பிறகு கடைகளை அடைக்க போலீசார் உத்தரவிட்டு இருந்தனர்.
கடைகளை அடைக்க எச்சரிக்கை
அதன்படி மதியம் 1.45 மணிக்கே ரோந்து வாகனங்களில் வந்த போலீசார் கடைகளை அடைக்கும்படி, உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனால் உரிமையாளர்கள் கடைகளை அடைத்தனர்.
இதனால் 8 மாவட்டங்களிலும் மதியத்திற்கு மேல் கடைவீதிகள் வெறிச்சோடி கிடந்தன. மேலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை தடுக்க போலீசார் ரோந்து சென்றனர். முக்கிய சாலைகளை இரும்பு தடுப்புகளை வைத்து போலீசார் அடைத்தனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். தேவையின்றி சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
சாலையில் காய்கறிகளை கொட்டினர்
கலபுரகியில் நேற்று காய்கறி மார்க்கெட்டுக்கு குறைந்த அளவே பொதுமக்கள் வந்தனர். இதனால் வியாபாரத்திற்காக வாங்கி வந்த காய்கறிகளை விற்க முடியாமல் வியாபாரிகள் அவதிப்பட்டனர். பின்னர் விற்பனை ஆகாத காய்கறிகளை சாலையில் வியாபாரிகள் கொட்டிவிட்டு சென்றனர்.
நாட்டு கோழிக்கு கடும் கிராக்கி
பெலகாவியில் நேற்று சனிக்கிழமை என்பதால் இறைச்சி வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். இதனால் இறைச்சி கடைகள் முன்பு கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் பெலகாவி டவுனில் உள்ள சந்தையில் நாட்டு கோழி விற்பனை செய்யப்பட்டது. அங்கு கோழிகளை வாங்க பொதுமக்கள் போட்டா, போட்டி போட்டனர். இதனால் நாட்டு கோழிகளுக்கு கடும் கிராக்கி உண்டானது.