நெல்லையில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

நெல்லையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-08-07 21:09 GMT
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது ஷாலி மகன் முகமது இத்ரீஸ் (வயது 20). இவர் நெல்லையில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூமில் ஊழியராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் மேலப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். குறிச்சி வாய்க்கால் பாலம் பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த முகமது இத்ரீஸ் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி முத்து (58). தொழிலாளியான இவர் நேற்று சைக்கிளில் கீழநத்தம் 4 வழிச்சாலை விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்தோணி முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று அந்தோணிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த 2 விபத்துகள் குறித்தும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்