கடையநல்லூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள்
கடையநல்லூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான கடையநல்லூர் அருகே வடகரை, அச்சன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வடகரையில் குடியிருப்பு பகுதி அருகில் உள்ள தோட்டத்துக்குள் 2 யானைகள் புகுந்தன. காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அப்பகுதி மக்கள், தோட்டத்தில் புகுந்த யானைகளை விரட்ட முயன்றனர். அப்போது பொதுமக்களை யானைகள் விரட்டியதால் அனைவரும் தலைெதறிக்க ஓட்டம் பிடித்து உயிர் தப்பினர். இதுகுறித்து கடையநல்லூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் விரைந்து சென்று, அங்கு பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் 2 யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வெளியே வரும் யானைகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. தற்போது குடியிருப்பு பகுதி அருகில் உள்ள தோட்டத்துக்குள்ளும் யானைகள் புகுந்து விட்டன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே வசிக்கும் நிலை உள்ளது. எனவே வனப்பகுதியில் இருந்து யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தனர்.