சரவணம்பட்டி போலீஸ் நிலையம் முற்றுகை
தூய்மை பணியாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சரவணம்பட்டி போலீஸ் நிலையம் முற்றுகையிட்டனர்.
சரவணம்பட்டி
கோவை சரவணம்பட்டி வீரமாச்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பத்திரன் (வயது 20). இவர் கொரோனா அறிகுறி உள்ளவர்களை கணக்கெடுக்கும் தற்காலிக பணியாளராக உள்ளார். இவர் நேற்று காலை சரவணம்பட்டியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அவர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த செல்போன் திருட்டுபோனது. இதனால் அதிர்ச்சியடைந்த பந்திரன், அங்கிருந்தவர்களிடம் கேட்டார். மேலும் போலீசுக்கு தகவல் கொடுப்பதாகவும் கூறினார்.
அப்போது செல்போனை எடுத்து வைத்திருந்த தற்காலிக தூய்மை பணியாளரான காந்திமாநகரை சேர்ந்த செல்வா-மகேஸ்வரி தம்பதியினர், செல்போனை எடுத்த இடத்தில் வைக்க முயன்றனர். இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மகேஸ்வரி கீழே கிடந்த கல்லை எடுத்து வீசியதில், தூய்மை பணியாளரான விளாங்குறிச்சி அம்பேத்கார் நகரை சேர்ந்த தெய்வானை (40) என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து அறிந்த தூய்மை பணியாளர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள், செல்வா-மகேஸ்வரி தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தம்பதியினர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.