மணல் திட்டுக்கள் அகற்றப்படுமா

பூம்புகார் கடற்கரையில் உள்ள மணல் திட்டுகள் அகற்றப்படுமா என்பது சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Update: 2021-08-07 17:23 GMT
திருவெண்காடு:
பூம்புகார் கடற்கரையில் உள்ள மணல் திட்டுகள் அகற்றப்படுமா? என்பது சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சுற்றுலா தலமாக பூம்புகார்
தமிழகத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக பூம்புகார் விளங்குகிறது என்றால் மிகையாகாது. மிகவும் சரித்திர புகழ்பெற்ற கோவலன் - கண்ணகி இந்த பகுதியில் வாழ்ந்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாக சரித்திர சான்றுகள் கூறுகின்றன. உலகிலேயே வாணிப துறைமுகம் அமைந்த ஒரே ஊராக இது விளங்கியது என சரித்திர குறிப்புகள் பறைசாற்றுகின்றன.
பழம்பெரும் நகரத்தை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள ஏதுவாக, 1972-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதியால் சிலப்பதிகார கலைக்கூடம் மற்றும் அழகிய கடற்கரை உருவாக்கப்பட்டது. 
மணல் திட்டுக்கள்
இதனை பார்ப்பதற்காக வெளிநாட்டினர், அண்டை மாநிலத்தினர் மற்றும் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக சுற்றுலா வளாகம் பராமரிக்கப்படாத காரணத்தால் சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலும் தடைபட்டுள்ளது. 
1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அழகிய கடற்கரையை கொண்டது பூம்புகார் கடற்கரை. தற்போது மணல் திட்டுக்கள் சூழ்ந்து, கருவேல மரங்கள் முளைத்த காடாக காட்சி அளிக்கிறது.
கருங்கல் தடுப்பு சுவர்
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், இலஞ்சி மன்றம் முதல் காவிரி கடலோடு கலக்கும் சங்கமத்துறை வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட கடற்கரையை கொண்டதாக பூம்புகார் விளங்குகிறது. 
ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் அரிப்பை தடுக்கும் பொருட்டு, கடற்கரையையொட்டி கருங்கல் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இதனால் கடற்கரை மணல் பரப்பு குறைந்து விட்டது. நெடுங்கல் மன்றம் முதல் காவிரி கரை வரை கருங்கல் தடுப்பு சுவருக்காக மணலை அப்புறப்படுத்தி குவித்தனர். பின்னர் அந்த மணலை சமன் செய்யாத காரணத்தால், கருவேல மரங்கள் மண்டி புதராக காட்சியளிக்கிறது. 
எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, சுற்றுலா பயணிகள் அமர்ந்து கடற்கரை அழகை கண்டு ரசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் குவிந்த மணலை அப்புறப்படுத்தாத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உடனடியாக கடற்கரையில் தேங்கி உள்ள மணல் திட்டுக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.

மேலும் செய்திகள்