சாப்பர்த்தி, மலையாண்டஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ரூ.1.89 கோடி முறைகேடு சங்க செயலாளர் உள்பட 4 பேர் கைது
சாப்பர்த்தி மலையாண்டஅள்ளி ஆகிய 2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ரூ.1 கோடியே 89 லட்சத்து 90 ஆயிரத்து 506 முறைகேடு செய்ததாக சங்க செயலாளர் உள்பட 4 பேர் கைது செய்ப்பட்டனர்.
காவேரிப்பட்டணம்:
சாப்பர்த்தி, மலையாண்டஅள்ளி ஆகிய 2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ரூ.1 கோடியே 89 லட்சத்து 90 ஆயிரத்து 506 முறைகேடு செய்ததாக சங்க செயலாளர் உள்பட 4 பேர் கைது செய்ப்பட்டனர்.
கூட்டுறவு சங்கங்கள்
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 250 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுமார் 140 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு புகார் கூறப்பட்ட சாப்பர்த்தி, மலையாண்டஅள்ளி தொடக்க வேளாண் சங்கங்களில் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் சாப்பர்த்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2014-2019-ம் ஆண்டு காலத்தில் 1 கோடியே 60 லட்சத்து 17 ஆயிரத்து 770 ரூபாயும், மலையாண்டஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2018-2019-ம் ஆண்டு காலத்தில் 29 லட்சத்து 72 ஆயிரத்து 736 ரூபாயும் முறைகேடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கிருஷ்ணகிரி சரக துணைப்பதிவாளர் ராதாகிருஷ்ணன் சென்னை வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அளித்தார்.
4 பேர் கைது
அதன்பேரில் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட சாப்பர்த்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உதவி செயலாளர் ஆர்.குமார், சரக மேற்பார்வையாளர் டி.ஜானகிராமன், நிர்வாககுழு உறுப்பினர் எம்.அல்லிமுத்து மற்றும் மலையாண்டஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.