ஐ.ஏ.எஸ். நுழைவு தேர்வில் தோல்வி அடைந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை தாம்பரம், ஐ.ஏ.எஸ். நுழைவு தேர்வில் தோல்வி அடைந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
தாம்பரம்,
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், ஸ்ரீராம் காலனியை சேர்ந்தவர் எழில்செல்வி (வயது 52). அரசு பள்ளி ஆசிரியை. கணவரை இழந்த இவர், தன்னுடைய மகள் பிரியதர்சினி (25) உடன் வசித்து வந்தார்.
பிரியதர்சினி ஐ.ஏ.எஸ். படித்து வந்தார். சமீபத்தில் நடைபெற்ற நுழைவு தேர்வில் அவர் தோல்வி அடைந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்த எழில்செல்வி, வெகு நேரமாக கதவை தட்டியும், அவருடைய மகள் பிரியதர்சினி கதவை திறக்கவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தனது மகள் பிரியதர்சினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தூக்கில் தொங்கிய பிரியதர்சினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.