பொன்னேரிக்கு தாமதமாக வருவதால் ஆத்திரம்: ரெயில்களை சிறைபிடித்து பயணிகள் போராட்டம்
பொன்னேரி ரெயில் நிலையத்திற்கு மின்சார ரெயில்கள் தினந்தோறும் காலதாமதமாக வருவதை கண்டித்து பயணிகள் திடீரென ரெயில்களை சிறைபிடித்து மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவை சுற்றி சின்னகாவனம், குன்னமஞ்சேரி, வேண்பாக்கம், தடபெரும்பாக்கம், கொடூர், கிருஷ்ணாபுரம், பெரியகாவனம், கூடுவாஞ்சேரி, காட்டாவூர், அரசூர், உப்பளம், காவல்பட்டி உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
மேலும் பொன்னேரியில் தாலுகா அலுவலகம், 5 கோர்ட்டுகள், அரசு ஆஸ்பத்திரிகள், பத்திரப்பதிவு அலுவலகம், வணிகவரி, எல்.ஐ.சி. அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், சிறைச்சாலை, 10-க்கும் மேற்பட்ட வங்கிகள், 3 கல்லூரிகள், 15 அரசுப்பள்ளிகள் உட்பட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
பொதுமக்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள் மாணவ-மாணவிகள் உட்பட சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர்கள் நாள்தோறும் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மின்சார ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது தமிழகத்தில் தொற்றின் தீவிரம் குறைந்த நிலையில், சில மாத காலமாக ரெயில்கள் இயங்கி வருகிறது.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரெயில் மார்க்கத்தில் பேசின்பிரிட்ஜ், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வ.உ.சி.நகர், திருவொற்றியூர், விம்கோ நகர், கத்திவாக்கம், எண்ணூர், அத்திப்பட்டு புதுநகர், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், மீஞ்சூர், பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன.
இந்தநிலையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி மார்க்கமாக மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் ரெயில்கள் கடந்த சில நாட்களாகவே காலதாமதமாக வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
மின்சார ரெயில்கள் காலதாமதமாக வந்து செல்வது குறித்து பயணிகள் தென்னக ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை 8.10 மணி ரெயிலுக்கு சென்னைக்கு செல்ல இருந்த ரெயில் பயணிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காலை 7 மணியில் இருந்து பொன்னேரி ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்து கொண்டிருந்தனர்.
மணி 8.45 வரையாகியும் வர வேண்டிய மின்சார ரெயில்கள் வராததால் ஆத்திரமடைந்த பயணிகள் அனைவரும் சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டி ரெயில் மார்க்க தண்டவாளத்தில் இறங்கினர்.
அப்போது பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டியில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்ல இருந்த மின்சார ரெயில்களை சிறைபிடித்தனர். மேலும், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கீழே இறங்குமாறு கோஷமிட்டனர்.
இதனால் கும்மிடிப்பூண்டியில் இருந்து பொன்னேரி நோக்கி வந்த ரெயில்களும் சென்னை சென்டிரலில் இருந்து பொன்னேரி நோக்கி சென்ற அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே வழியிலேயே நிறுத்தப்பட்டன. இதே போல் கும்மிடிப்பூண்டி மார்க்கமாக சென்னை செல்லும் 50-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்களும், சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
இந்தநிலையில் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் சிறைபிடிக்கப்பட்ட தகவல் பொன்னேரி போலீசாருக்கு கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், ரெயில் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காலதாமதமாக மின்சார ரெயில்கள் வருவதை சரிசெய்து குறிப்பிட்ட நேரத்திற்கு வர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர். அப்போது பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர், தென்னக ரெயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் சச்சின் புனிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போலீசார் முன்னிலையில் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சென்னை நகருக்குள் செல்லும், கும்மிடிப்பூண்டி மார்க்க மின்சார ரெயில்கள் தினந்தோறும் காலதாமதமாக செல்வதால் வேலைக்கு செல்வோர் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், காலதாமதமாக வரும் ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இனிமேல் குறிப்பிட்ட நேரத்திற்கு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்த நிலையில், மறியல் போராட்டத்தை ரெயில் பயணிகள் கைவிட்டனர்.
அதைத்தொடர்ந்து, பிற்பகல் 12.30 மணிக்கு மின்சார ரெயில்கள் புறப்பட்டுச் சென்றது. 4 மணி நேரம் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மின்சார மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.