சுங்குவார்சத்திரம் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சுங்குவார்சத்திரம் அடுத்த கீரநல்லூர் பகுதியில் புதிதாக அரசு மதுக்கடை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது.

Update: 2021-08-07 04:35 GMT
ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த கீரநல்லூர் பகுதியில் புதிதாக அரசு மதுக்கடை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று கீரநல்லூர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மதுக்கடையை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அந்த வழியாகதான் பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. மதுக்கடையால் அந்த வழியாக செல்லும் பெண்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இது குறித்து ஏற்கனவே காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்திருந்தோம். இருப்பினும் அரசு மதுபான கடை மண்டல மேலாளர் இதற்கு அனுமதி அளித்துள்ளதாக கூறினர்.

மேலும் செய்திகள்