மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி சாவு
வள்ளியூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகேயுள்ள தெற்குகள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் சுமன் (வயது 44). விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் வள்ளியூர் அருகே ஆனைகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் தனது உறவினரின் மகளையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு தெற்குகள்ளிகுளத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஆனைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலயம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக ஜேக்கப் சுமன் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடன் வந்த உறவினரின் மகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஜேக்கப் சுமனுக்கு வினோலின் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.