டிரைவர்களிடம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாததால் தமிழக லாரிகள் தடுத்து நிறுத்தம்
சாம்ராஜ்நகர் அருகே டிரைவர்களிடம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாததால், தமிழக லாரிகளை கர்நாடக அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு உண்டானது.
பெங்களூர்,
கேரளா, மராட்டியத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அந்த மாநிலங்களில் இருந்து கர்நாடகம் வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள் ஆர்.டி.பி.சி.ஆர். மூலம் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை எடுத்து வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.
தற்போது தமிழகத்தில் இருந்து கர்நாடகம் வருபவர்களும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் எடுத்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கர்நாடகம்-தமிழகம்-கேரளா எல்லையில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா கெக்கனகல்லா சோதனை சாவடியில் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக தமிழகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு லாரிகள் கர்நாடகத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தன.
அப்போது தமிழக லாரிகளை மறித்த அதிகாரிகள் டிரைவர்கள், கிளீனர்களிடம் கொரோனா நெகட்டிவ் அறிக்கை கேட்டனர். ஆனால் டிரைவர்கள், கிளீனர்களிடம் நெகட்டிவ் சான்றிதழ் இல்லை.
இதனால் தமிழக லாரிகளை கர்நாடகத்திற்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரைவர்கள், கிளீனர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதுபற்றி அறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் தமிழக லாரிகளை கர்நாடகத்திற்குள் அதிகாரிகள் அனுமதித்தனர்.