சத்தியமங்கலம் அருகே பரபரப்பு தோட்டத்துக்குள் புகுந்து நாயை கவ்விய சிறுத்தை; விவசாயிகள் விரட்டியதால் காட்டுக்குள் ஓடியது

சத்தியமங்கலம் அருகே தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை நாயை கவ்வி இழுத்து செல்ல முயன்றது. விவசாயிகள் விரட்டியதால் காட்டுக்குள் ஓடியது.

Update: 2021-08-06 20:59 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை நாயை கவ்வி இழுத்து செல்ல முயன்றது. விவசாயிகள் விரட்டியதால் காட்டுக்குள் ஓடியது. 
சிறுத்தை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி, ஜீர்கள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் யானை, கரடி, புலி, சிறுத்தை, காட்டெருமை, கழுதைப்புலி, மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, புலி போன்றவை அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை கவ்விக்கொண்டு வனப்பகுதிக்குள் இழுத்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. 
நாயை கவ்வியது
 சத்தியமங்கலம் அருகே உள்ளது ஓட்டைக்குட்டை கிராமம். வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் சுமதி என்பவர் 2 ஏக்கர் நிலத்தில் கால்நடைகளுக்கான தீவன புல் வளர்த்து வருகிறார். அவரது வீட்டை ஓட்டியே தோட்டம் உள்ளது. வனப்பகுதியையொட்டி தோட்டம் உள்ளதால் வனவிலங்குகளின் தொல்லை காரணமாக காவலுக்காக அவர் 3 நாய்களை வளர்த்து வருகிறார்.
 வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு சுமதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. உடனே அவர் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது சிறுத்தை ஒன்று நாயை கவ்விக்கொண்டு ஓட முயற்சித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு கூச்சலிட்டார். அவருடன் சேர்ந்து மற்ற 2 நாய்களும் அதிகமாக குரைக்க தொடங்கியது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து விவசாயிகளும் அங்கு ஓடோடி வந்தனர். 
அவர்கள் பட்டாசு வெடித்தும், தகர டப்பாக்கள் மூலமும் ஒலி எழுப்பினர். இதனால் சிறுத்தை தான் கவ்விய நாயை அங்கேயே போட்டு விட்டு காட்டுக்குள் ஓடி விட்டது.  இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். மேலும் அங்கு பதிவாகி உள்ள கால்தடங்களை ஆய்வு செய்தனர். அங்கு பதிவாகி இருந்தது சிறுத்தையின் கால் தடம்தான் என்று வனத்துறையினர் உறுதி செய்தனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றும், சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்படும் என்றும் விவசாயிகளிடம் வனத்துறையினர் தெரிவித்தனர்.
டி.என்.பாளையம்
இதேபோல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. டி.என்.பாளையம் அருகே உள்ள மாப்பாங்கரடு பகுதியை சேர்ந்தவர் மாதப்பன் (வயது 44). இவர் தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை மாதப்பன் தோட்டத்துக்கு வந்தது. அப்போது தோட்டத்தில் கட்டி இருந்த நாய் சிறுத்தையை பார்த்ததும் குரைத்துக்கொண்டே இருந்தது. நாயின் சத்தம் கேட்டு வெளியே வந்த மாதப்பன் தோட்டத்தில் சிறுத்தை நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 
விவசாயிகள் கோரிக்கை
உடனே அவர் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டதும் சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடிச்சென்று மறைந்தது. இதுபற்றி மாதப்பன்  டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கால்தடங்களை ஆய்வு செய்தனர்.  மாப்பாங்கரடு பகுதியில் சிறுத்தை ஆடு, மாடு, நாய்களை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று அந்தப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்