அம்பேத்கர் சிலை திறப்பதில் பிரச்சினை: இரு தரப்பினர் சாலை மறியலால் பரபரப்பு போலீசார் குவிப்பு
கெங்கவல்லி அருகே அம்பேத்கர் சிலை திறப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கெங்கவல்லி
அம்பேத்கர் சிலை
கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் ஊராட்சி பஸ் நிறுத்தத்தில் அம்பேத்கர் சிலையை ஒரு பிரிவினர் அமைத்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன், இரு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தினார். ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதனால் அரசிடம் அனுமதி பெற்று அம்பேத்கர் சிலையை திறக்க வேண்டும் என்றும், அதுவரை சிலையை சுற்றி தகரம் வைத்து மறைக்கப்படும் என்றும் தாசில்தார் வெங்கடேசன் தெரிவித்தார்.
சாலை மறியல்
இந்தநிலையில் நேற்று காலை வருவாய்த்துறையினர், போலீசார் உதவியுடன் அம்பேத்கர் சிலையை சுற்றி தகரம் அமைக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த ஒரு தரப்பினர் வருவாய்த்துறையினர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.
இதையடுத்து வருவாய்த்துறையினர், போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், அம்பேத்கர் சிலையை முழுவதும் மறைக்காமல் 14 அடி உயரத்திற்கு மட்டுமே தகரம் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கண்ணாடி உடைப்பு
இதனிடையே அங்கு வந்த மற்றொரு தரப்பினர் சமாதான கூட்டத்தில் கூறியபடி, அம்பேத்கர் சிலையை முழுவதுமாக மறைக்க வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வருவாய்த்துறையினர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இரு தரப்பினரின் அடுத்தடுத்த மறியல் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இம்மானுவேல் ஞானசேகர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியை சேர்ந்த பாலமுருகன், ரஞ்சித்குமார் ஆகியோரின் சொர்க்க ரத வாகனத்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் சிலர் உடைத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.