ஸ்ரீரங்கம், சமயபுரம், மலைக்கோட்டை கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு
ஸ்ரீரங்கம், சமயபுரம், மலைக்கோட்டை கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளதற்கு தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம், சமயபுரம், மலைக்கோட்டை கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளதற்கு தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
தமிழில் அர்ச்சனை திட்டம்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 47 கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் தற்போது ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சனை செய்யப்படுவதில்லை. இந்த தடை நீங்கிய பின், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தமிழில் அர்ச்சனை திட்டம் நடைமுறைக்கு வரும். மேலும் இது குறித்து பக்தர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற விளம்பர பலகை கோவில் வளாகத்தில் வைக்கப்பட உள்ளது.
வரவேற்பு
இதுபோல் சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. இதுபற்றி பக்தர்களுக்கு தெரியும் வகையில், கோவில் நிர்வாகம் சார்பில் ராஜகோபுரத்தின் முன்புறம், கோவிலின் உள்பிரகாரம் மற்றும் பின்பக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் இந்தத் திட்டம் குறித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில் கோவில் குருக்களின் பெயர்கள், அவர்களுடைய செல்போன் நம்பர் எழுதப்பட்டுள்ளது. கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற திட்டத்தை தமிழ் ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.