சிங்களாந்தபுரத்தில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி துறையூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சிங்களாந்தபுரம் ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி துறையூர் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துறையூர்,
சிங்களாந்தபுரம் ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி துறையூர் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் வழங்கக்கோரிக்கை
துறையூர் ஊராட்சி ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது சண்முகா நகர். இப்பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் இப்பகுதிக்கு 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் தங்கள் கிராமத்துக்கு குடிநீர் கேட்டு ஊராட்சி தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
முற்றுகை போராட்டம்
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதைத்தொடர்ந்து திட்ட மேலாளர் சந்திரிகா பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.