அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன

வாரத்தின் கடைசி 3 நாட்களுக்கு பக்தர்களுக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் நாகை மாவட்டத்தில் நேற்று அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன.

Update: 2021-08-06 18:26 GMT
நாகப்பட்டினம்:
வாரத்தின் கடைசி 3 நாட்களுக்கு பக்தர்களுக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் நாகை மாவட்டத்தில் நேற்று அனைத்து  மத வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன.
கொரோனா 3-வது அலை
கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் சில வழிபாட்டுத்தலங்களுக்கும் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கும் பொது மக்கள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 
தற்போது நிலவிவரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக, மாவட்டத்திலுள்ள அனைத்து மத வழிப்பாட்டு தலங்களிலும்  வாரத்தின் கடைசி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்களுக்கு தரிசனம் செய்யவும், அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் முற்றிலுமாக தடை  விதிக்கப்பட்டுள்ளது. 
வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டன
ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அந்தந்த மத ஆகம விதிகளின்படி நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறுவதற்கு தடை ஏதுமில்லை என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 
அதன்படி பிரசித்தி பெற்ற நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், சவுந்தரராஜ பெருமாள் கோவில், சிக்கல் சிங்காரவேலர் கோவில், வேதாரண்யம் வேதாரண்யயேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் தர்கா, நாகூர் நாகநாதர் கோவில், நாகூர் பாத்திமா அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நேற்று மூடப்பட்டன. இதனால் ஒரு சில பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் செய்தனர்.
வெளியில் நின்று பிரார்த்தனை
நாகூர் தர்கா மூடப்பட்டதால் வெளியூர், மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஆண்டவர் தர்கா அலங்கர வாசல், கால்மாட்டு வாசல், கீழக்கு வாசல் பகுதிகளில் வெளியில் நின்று பிரார்த்தனை செய்தனர்.

மேலும் செய்திகள்