திருவலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல். 2 வாலிபர்கள் பலி

திருவலத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 வாலிபர்கள் பலியானார்கள். ஒருவர் காயத்துடன் தப்பினார்.

Update: 2021-08-06 17:47 GMT
திருவலம்

மோட்டார்சைக்கிள்கள் மோதல்

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள சீக்கராஜபுரம் புரட்சித்தலைவர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (வயது 27), மற்றும் சரவணன் (17). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு சீக்கராஜபுரத்திலிருந்து, திருவலம் நோக்கி, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மணிகண்டன் மோட்டார் சைக்கிளை ஓட்ட, சரவணன் பின்னால் அமர்ந்து சென்றார்.

அதேநேரத்தில் வேலூர் மாவட்டம், திருவலம், பொன்னை கூட்ரோடு பகுதியில் இருந்து சீக்கராஜபுரம் நோக்கி அய்யப்பன் (26) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். திருவலம் பஸ் நிலையம் அருகே இரண்டு மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

2 வாலிபர்கள் பலி

இதில் மணிகண்டன், சரவணன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் வாலாஜா அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே சரவணன் பரிதாபமாக இறந்தார். மணிகண்டனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். 

மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த அய்யப்பன் காயமடைந்து ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், திருவலம் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்