ரூ.10 லட்சம் பெற்று ஆசிரியர் மோசடி

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதாக கூறி ரூ.10 லட்சம் பெற்று ஆசிரியர் மோசடி செய்துள்ளதாக போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் புகார் தொிவித்தனா்.

Update: 2021-08-06 17:31 GMT
விழுப்புரம், 

திண்டிவனம் அண்ணா நகரை சேர்ந்த விஜயலட்சுமி, சந்திரசேகர், அம்பிகா, எறையானூர் பிரபு, திண்டிவனம் கோபாலபுரம் கலியபெருமாள், திண்டிவனம் நல்லியகோடன் நகர் ராஜாமணி, புதுச்சேரி லாஸ்பேட்டை ஜெயராமன் ஆகியோர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- திண்டிவனம்- மரக்காணம் சாலையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் எங்களிடம் வந்து தான் ஒரு வருடத்திற்கும் மேலாக காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்து பல லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளேன் என்றும், அந்நிறுவனத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் 10 மாதங்கள் கழித்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனையோ அல்லது ரூ.18 லட்சம் தொகையாகவோ அல்லது மாதத்திற்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வீதம் 10 மாதம் வீதம் அவரவர் வங்கி கணக்கில் பணம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பிய நாங்கள் ஒவ்வொருவரும் அந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்வதற்காக அந்த தனியார் பள்ளி ஆசிரியரை சந்தித்து அவரிடம் ரூ.10 லட்சம் கொடுத்தோம். ஆனால் 10 மாதங்கள் கழித்து ரூ.18 லட்சம் தருவதாக கூறியபடி பணம் கிடைக்கவில்லை. நாங்கள் கொடுத்த அசல் பணத்தில் மாத தவணையாக ரூ.8 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை தராமல் எங்களிடம் ரூ.10 லட்சம் வரை ஏமாற்றி மோசடி செய்து விட்டார். இதுபோல் திண்டிவனம் பகுதியை சேர்ந்த பலரிடம் அந்த ஆசிரியர் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். 
மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

மேலும் செய்திகள்