கொரோனா தடுப்பூசி
காங்கேயம், முத்தூரில் 950 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
காங்கேயம்
காங்கேயம், முத்தூரில் 950 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வுகளும், தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கேயம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு முதல் மற்றும் 2ம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று சாவடிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 150 பேருக்கும், பாப்பினி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 150 பேருக்கும், காங்கேயம்-பழையகோட்டை சாலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 180 பேருக்கும் மொத்தம் 480 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்கள் முககவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
முத்தூர்
முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வீரசோழபுரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில் நேற்று நடைபெற்றது. முகாமில் முத்தூர் சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-வது தவணையாக மொத்தம் 250 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 70 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் இலவசமாக போட்டனர்.
நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் அரசு ஆரம்ப பள்ளியில் நேற்று காலை நடைபெற்றது. முகாமில் சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை, பரஞ்சேர்வழி ஆகிய 4 ஊராட்சியில் 2வது தவணையாக 100 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 50 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் இலவசமாக போட்டனர். அதன்படி முத்தூரில் மொத்தம் 470 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.