ஆடி 3 வது வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி கோவையில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கோவை
ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி கோவையில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
சிறப்பு பூஜை
தமிழ் மாதங்களில் அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
3-வது வெள்ளிக்கிழமை கோவையில் உள்ள கோனியம்மன், தண்டு மாரியம்மன், காட்டூர் முத்துமாரியம்மன், புலியகுளம் மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கோவை ராஜவீதியில் உள்ள மாகாளியம்மனுக்கு நேற்று கொண்டைக் கடலை, பயிறு, பாசிப்பருப்பு உள்ளிட்ட நவதானியங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
நவ தானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வளையல் அலங்காரம்
கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோடு பெரியமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவை ராஜூ செட்டியார் வீதியில் உள்ள வன பத்ரகாளியம்மனுக்கு பல்வேறு வகையான மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதேபோல் புலியகுளம் மாரியம்மன், பத்ர காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.