உலகம்பட்டி அருகே கட்டப்படும் தடுப்பணை மூலம் 96 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்; அமைச்சர் இ.பெரியசாமி பேட்டி
உலகம்பட்டி அருகே கட்டப்படும் தடுப்பணை மூலம் 96 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.
தாடிக்கொம்பு:
உலகம்பட்டி அருகே கட்டப்படும் தடுப்பணை மூலம் 96 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.
தடுப்பணை
அகரம் பேரூராட்சி உலகம்பட்டி அருகே ரூ.7 கோடியே 70 லட்சத்தில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை தடுப்பணை அமைய உள்ள இடத்தில் நேற்று நடந்தது. இதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் விசாகன், பழனி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதையடுத்து தடுப்பணைக்கான பூமி பூஜை நடந்தது. பின்னர் அப்பகுதியில் மரக்கன்றை அமைச்சரும், பழனி எம்.எல்.ஏ.வும் நட்டு வைத்தனர். பின்னர் தடுப்பணை அமைய உள்ள இடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் சமன்படுத்தும் பணி நடந்தது. இதனை அமைச்சர் பார்வையிட்டார்.
பூமி பூஜை நிகழ்ச்சியில் திண்டுக்கல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, திண்டுக்கல் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் நந்தகோபால், அகரம் பேரூர் கழக செயலாளர் ஜெயபால், அவைத்தலைவர் ரத்தினசாமி, தாடிக்கொம்பு பேரூர் கழக செயலாளர் நாகப்பன், அவைத்தலைவர் சுப்பையா, மாவட்ட பிரதிநிதிகள் செல்வராஜ், இன்னாசி, ராஜூ, தி.மு.க. பிரமுகர் சின்னத்தம்பி, அகரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரி மற்றும் உலகம்பட்டி, அப்பணம்பட்டி, அச்சாம்பட்டி, பாப்பணம்பட்டி ஊர் பெரிய தனக்காரர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
பாசன வசதி
விவசாயிகளின் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் விவசாயிகளின் நீண்ட நாள் கனவான உலகம்பட்டியில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை தற்போது தொடங்கி வைத்து அவர்களின் கனவை நனவாக்கியுள்ளார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தோன்றும் மாங்கரையாறு கோடல்வாவி, மாங்கரை, முத்தனம்பட்டி, சில்வார்பட்டி, அகரம் ஆகிய கிராமங்கள் வழியாக சென்று குடகனாற்றில் கலக்கிறது. இந்த நிலையில் தற்போது அகரம் கிராமத்தில் உலகம்பட்டி அருகே 90 மீட்டர் நீளத்தில், 2.56 மீட்டர் உயரத்தில் தடுப்பணை அமைக்கப்பட இருக்கிறது. இந்த தடுப்பணைக்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்தால் மாயாண்டி குளத்துக்கு தண்ணீர் கிடைக்கும். மேலும் உலகம்பட்டி கிராமத்தில் உள்ள 96 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.