கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்ல முயன்ற சுற்றுலா பயணிகள்; போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்
கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்ல முயன்ற சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்ல முயன்ற சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
சுற்றுலா பயணிகள்
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் நகரில் உள்ள சுற்றுலா இடங்கள், பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் நகரின் அழகை மட்டும் ரசித்தபடி திரும்பி செல்கின்றனர். இருப்பினும் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அவ்வாறு இருசக்கர வாகனங்களில் வரும் இளைஞர்கள் பலரும் கொரோனா அபாயத்தை உணராமல் முக கவசம் இன்றியும், ஹெல்மெட் அணியாமலும் வருகிறார்கள். அவர்களை போலீசார் எச்சரித்தும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர்.
கூடுதல் கட்டுப்பாடுகள்
இதற்கிடையே கொரோனா வைரசின் 3-வது அலை பரவலை தடுக்கும் வகையிலும், சுற்றுலா பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் கொடைக்கானலில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நகரில் உள்ள அருவி பகுதிகள், டால்பின்நோஸ், பசுமை பள்ளத்தாக்கு போன்ற சுற்றுலா இடங்களுக்கு செல்ல நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்தனர். அதிக அளவு வாகனங்கள் வந்ததால் நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.
போலீசார் எச்சரிக்கை
கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகளில் சிலர் தடை செய்யப்பட்ட டால்பின்நோஸ் பகுதிக்கு செல்ல வட்டக்கானல் வரை வாகனங்களில் வந்தனர். அப்போது அங்கு சோதனை சாவடியில் இருந்த போலீசார் தடையை மீறி செல்ல முயன்ற சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
அப்போது சுற்றுலா பயணிகள் சிலர், போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து எடுத்துக்கூறினர். அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் திரும்பி சென்றனர். இதேபோன்று தடை செய்யப்பட்ட அருவி பகுதிகளுக்கு செல்ல முயன்ற சுற்றுலா பயணிகளும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.