தொப்பூர் கணவாயில் நடந்த விபத்தில் பெண்கள் உள்பட 10 பேர் காயம் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தொப்பூர் கணவாயில் நடந்த விபத்தில் பெண்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-08-06 15:32 GMT
நல்லம்பள்ளி:
 தொப்பூர் கணவாயில் நடந்த விபத்தில் பெண்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லாரி மோதியது
ஐதராபாத்தில் இருந்து பஞ்சு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு, ஒரு லாரி தர்மபுரி மாவட்டம் வழியாக திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலுக்கு நேற்று வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜவேலு (வயது 43) என்பவர் ஓட்டி வந்தார்.
தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற லாரி மற்றும் 3 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
இந்த விபத்தில் கார்களில் வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த முனிரத்தினம் (50), ஜெயலட்சுமி (42), கவிதா (39), பிரியதர்ஷினி (18), பெங்களூருவை சேர்ந்த அருண் (40), பாஷா (31), இம்ரான் (30), ஜமில் (31), ஓசூரை சேர்ந்த மோகன் (30) மற்றும் டிரைவர் ராஜவேல் ஆகிய 10 பேர் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
இதையடுத்து போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து காயம் அடைந்த பெண்கள் உள்பட 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தொப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தொடர்ந்து விபத்துக்குள்ளான லாரிகள், கார்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். 
இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்