பெண்ணின் வேண்டுகோளை ஏற்று முககவசத்தை கழற்றிய மு.க.ஸ்டாலின்

‘உங்கள் முகத்தை பார்க்க வேண்டும், முக கவசத்தை கழற்றுங்கள்’ என்று கேட்டுக்கொண்ட பெண்ணின் வேண்டுகோளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார்.

Update: 2021-08-06 13:56 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் அரசு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் உள்ள விமான தளத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் முதல்-அமைச்சரை காண்பதற்காக கூடியிருந்தனர்.

ஓசூர் உழவர் சந்தை அருகில் முதல்-அமைச்சரின் கார் மெதுவாக சென்ற போது, சாலையோரம் வந்த ஒரு பெண், முதல்-அமைச்சரின் காரை பார்த்து ‘சார், மாஸ்க்கை எடுங்க.... எப்ப சார் பார்க்கிறது உங்க முகத்தை.... மாஸ்க்கை எடுங்க சார், ஒரு டைம் பார்க்கிறோம். ஒரு செகண்ட் தான் சார். எப்ப பார்க்கிறது சார். ரொம்ப வருஷங்களா ரொம்ப ஆசையா இருக்கிறோம்’ என்று சத்தமாக கூறினார்.

இன்ப அதிர்ச்சி

இதையடுத்து காரை நிறுத்த சொன்ன முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக கவசத்தை கழற்றி விட்டு அந்த பெண்ணிடம் புன்சிரிப்புடன் பேசினார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து அவர் விடாமுயற்சி, விஸ்வரூப வெற்றி அதற்கு பெயரே ஸ்டாலின் தான் சார் என்று அந்த பெண் தெரிவித்தார்.

தொடர்ந்து அந்த பெண் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவை மு.க.ஸ்டாலின் வாங்கி கொண்டு காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சரின் காரின் அருகில் சென்று துணிச்சலாக உரக்க பேசிய அந்த பெண் யார் என விசாரித்த போது அவரது பெயர் ரம்யா என்பதும், அதே பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது.

எளிய அணுகுமுறை

முதல்-அமைச்சருடன் பேசியது குறித்து ரம்யா கூறுகையில், ‘முதல்-அமைச்சரை நேரில் பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டேன். அவர் ஓசூர் வந்துள்ளதாக தகவல் அறிந்து அவரை பார்க்க நின்றேன். முக கவசத்தை எடுங்கள் என்று நான் கூறியதும், அவர் முக கவசத்தை எடுத்து விட்டு என்னிடம் பேசியது மகிழ்ச்சியை தருகிறது’ என்றார்.

ஒரு சாதாரண பெண்ணின் வேண்டுகோளை ஏற்று முக கவசத்தை கழற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இனிய சுபாவம் மற்றும் எளிய அணுகுமுறையை மக்கள் வரவேற்றனர். மு.க.ஸ்டாலினிடம், பெண் ரம்யா முக கவசத்தை கழற்ற சொல்லுவதும், பேசும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்