இரட்டை லாபம் தரும் அன்னாசி பழம் சாகுபடி

குமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்களில் ஊடு பயிராக பயிரிடப்படும் அன்னாசி பழம் சாகுபடியால் விவசாயிகளுக்கு இரட்டை லாபம் கிடைக்கிறது.

Update: 2021-08-05 21:04 GMT
திருவட்டார்:
குமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்களில் ஊடு பயிராக பயிரிடப்படும் அன்னாசி பழம் சாகுபடியால் விவசாயிகளுக்கு இரட்டை லாபம் கிடைக்கிறது.  
ஊடு பயிர்
குமரி மாவட்டத்தில் ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் ஊடுபயிராக வாழை, மரவள்ளி கிழங்கு போன்றவை பயிரிடப்பட்டது. தற்போது அந்த இடத்தை அன்னாசி பிடித்துள்ளது. திருவட்டார் அருகே அருவிக்கரை மாத்தூர் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் ரப்பர் தோட்டங்களுக்கு இடையே அன்னாசி பயிரிடப்படுகிறது. குறிப்பாக ரப்பர் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்தும் அன்னாசி விவசாயம் செய்யப்படுகிறது. 
இதுகுறித்து மாத்தூரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- 
நான் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு ரப்பர் தோட்டங்களில் ஊடுபயிராக அன்னாசி பயிரிட்டு வருகிறேன். இதற்காக குட்டக்குழி, அருமனை, பனச்சமூடு போன்ற பகுதிகளில் ரப்பர் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து அன்னாசி விவசாயம் செய்துள்ளேன்.  
குறுகிய காலத்தில் பலன் கிடைக்கும்
ரப்பர், தென்னை போன்றவை பலன் தர குறைந்தது 7 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அன்னாசியை பொறுத்தவரை  குறுகிய காலத்திலேயே பலன் தரும். ஒரு ஏக்கர் நிலத்தில் அன்னாசி பயிரிட சுமார் 1½ லட்சம் வரை செலவாகும். இது நன்கு வறட்சி தாங்கும் பயிர் ஆகும். ஆனாலும், வெயில் காலங்களில் தினசரி ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் காய்கள்  நன்கு பருமனாகும். 
ஒரு ஆண்டில் காய் நன்கு பழமாகும் தருவாய் வந்ததும் அவற்றை அறுவடை செய்து சந்தையில் விற்கலாம். இப்போது  மார்க்கெட்டில் அன்னாசி பழம் தேவை அதிகமாக இருப்பதால் பெரும்பாலும் வியாபாரிகள் தோட்டத்துக்கு வந்து அன்னாசிப்பழங்களை வாங்கி செல்கிறார்கள். 
இரண்டு ஆண்டுகளில் ஒரு ஏக்கர் நிலத்தில் 30 டன் வரை அன்னாசி பழம் கிடைக்கும். சராசரியாக ஒரு டன்னுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ. 35 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைக்கும். அன்னாசிப்பழங்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக குலசேகரம் உள்ளது, என்றார். 
அன்னாசி பழங்களை வெளியூர்களுக்கு லாரிகளில் ஏற்றுமதி செய்யும் விஜூ கூறியதாவது:-
இரட்டை லாபம்
குமரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அன்னாசிப்பழங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக விவசாயிகள் ரப்பர் தோட்டங்களில் ஊடுபயிராக அன்னாசியை பயிரிட குத்தகைக்கு வழங்கி வருகிறார்கள். இதில் தோட்ட உரிமையாளருக்கு இரட்டை லாபம் கிடைக்கிறது. குத்தகைப்பணம் மற்றும் ரப்பர் செடிகள் பராமரிப்பு இலவசமாக கிடைக்கும். 
குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை, விஜயவாடா, பெங்களூரு, மராட்டியம் போன்ற பகுதிகளிலும் நாங்கள் அன்னாசி ஏற்றுமதி செய்கிறோம். 
தினசரி 10 டன் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. சில நாட்கள் 30 டன் அன்னாசிப்பழங்கள் கூட ஏற்றுமதி செய்வது உண்டு, என்றார்.

மேலும் செய்திகள்