கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மகன் கொலை
ஹாவேரி அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஆயுதங்களால் தாக்கி கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு: ஹாவேரி அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஆயுதங்களால் தாக்கி கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
வாலிபர் கொலை
ஹாவேரி மாவட்டம் சிக்காவி அருகே சிக்கபெட்டகேரி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 32). இவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். தினேசுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தினேசின் தாய் கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்ற தினேஷ் நள்ளிரவு வரை திரும்பி வரவில்லை. தினேசை, அவரது மனைவி அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார், அவர் கிடைக்கவில்லை.
தினேசின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று காலையில் சிக்கபெட்டகேரி அருகே குஷிநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் தினேஷ் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்ததும் சிக்காம் போலீசார் விரைந்து வந்து தினேசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினாா்கள்.
கள்ளத்தொடா்பு
அப்போது நேற்று முன்தினம் இரவே தினேசை வேறு இடத்தில் வைத்து, மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு, அவரது உடலை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வீசிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் தினேசுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனால் அந்தபெண்ணின் கணவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து சிக்காம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.