மணல் கடத்தலுக்கு லஞ்சம் வாங்கியதாக போலீசாரை மிரட்டி வீடியோ வெளியிட்ட வாலிபர் பணம் வாங்கி விட்டு வாகனங்களை பறிமுதல் செய்ததாக ஆவேசம்
கும்பகோணம் அருகே மணல் கடத்தலுக்கு லஞ்சம் வாங்கியதாக போலீசாரை மிரட்டி வாலிபர் ஒருவர் வீடியோ வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவர் போலீசார் பணம் வாங்கி விட்டு வாகனங்களை பறிமுதல் செய்து விட்டதாக ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பனந்தாள்:-
கும்பகோணம் அருகே மணல் கடத்தலுக்கு லஞ்சம் வாங்கியதாக போலீசாரை மிரட்டி வாலிபர் ஒருவர் வீடியோ வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவர் போலீசார் பணம் வாங்கி விட்டு வாகனங்களை பறிமுதல் செய்து விட்டதாக ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாகனங்கள் பறிமுதல்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள குலசேகரநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்புராயன் மகன் இளையராஜா(வயது 34). இவர், கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் கடத்தியதாக அவருக்கு சொந்தமான 3 டிராக்டர்களை, பந்தநல்லூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளையராஜா டிராக்டர்களை பறிமுதல் செய்ததை அறிந்து சம்பவத்தன்று பந்தநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு ஒரு பெண் போலீசார் மட்டுமே பணியில் இருந்தார்.
வீடியோ மூலம் மிரட்டல்
இந்த நிலையில் இளையராஜா போலீஸ் நிலையம் முன்பு நின்றபடி தனது செல்போன் மூலமாக ‘செல்பி’ வீடியோ எடுத்தார். அந்த வீடியோவில், போலீசாரை சரமாரியாக தகாத வார்த்தைகளால் திட்டி உள்ள அவர், ‘மணல் திருடுவதற்கு பணம் வாங்கிய போலீஸ் அனைவரையும் உள்ளே வைத்து விடுவேன்’ என மிரட்டல் விடுத்து ஆவேசமாக பேசி உள்ளார். வீடியோவில் மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
‘ரூ.10 ஆயிரம் வாங்குகிறீர்கள்’
எனக்கு கொரோனா உள்ளது. என்னை தொட முடியாது. இன்ஸ்பெக்டர் எங்கே? யாருமே இல்லையா? காசு மட்டும் வாங்க தெரிகிறது. இன்ஸ்பெக்டரை வெளியே வரச்சொல்லுங்கள். நான் உள்ளே வரமுடியாது. நான் கொரோனா நோயாளி உங்களாலே நான் செத்துவிடுவேன் போல இருக்கு.
என்னோட வண்டியை பிடித்து வைத்து வழக்கு போடுகிறார்கள். இந்த போலீஸ் நிலையத்தில் பணம் வாங்காமல் இருக்கிறார்களா? ஒரு வண்டிக்கு ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வீதம், மணல் கடத்தல் வண்டிக்கு வாங்குகிறீர்கள். தினந்தோறும் 30 வண்டிக்கு பணத்தை வாங்குகிறீர்கள்.
சமூக வலைதளங்களில் பரவுகிறது
நான் சொல்லி விட்டு தான் சென்றேன். அப்புறம் எதற்காக எனது வண்டிகளை பறிமுதல் செய்தீர்கள்? போலீசார் என்னிடம் மணல் வண்டி ஓட்டாதே என்றால் நிறுத்திக்கொள்கிறேன்.
இன்றைக்கு என் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்திட்டீங்க. இதனை எங்கு கொண்டு போக வேண்டுமோ? கொண்டு செல்வேன்.
இவ்வாறு அவர் பேசிஉள்ளார்.
பந்தநல்லூர் போலீஸ் நிலையம் முன்பு எடுக்கப்பட்ட இந்த வீடியோ 4 நிமிடங்கள் வரை ஓடுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இன்ஸ்பெக்டர் இடமாறுதல்
பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சந்தானமேரி கடந்த வாரம் நாகை மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். தற்போது பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்கவில்லை. இதனால் திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
இதுதொடர்பாக அவர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இளையராஜாவை தேடி வருகிறார். மணல் கடத்தலுக்கு போலீசார் லஞ்சம் வாங்குவதாக கூறி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையம் முன்பாக வாலிபர் ஒருவர் ‘செல்பி’ வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டது போலீசார் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.