மல்லசமுத்திரம் அருகே தறிகெட்டு ஓடிய கார், மொபட் மோதி பெண் பலி - 2 பேர் படுகாயம்
மல்லசமுத்திரம் அருகே தறிகெட்டு ஓடிய கார், மொபட் மோதி பெண் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மல்லசமுத்திரம்,
மல்லசமுத்திரம் அருகே உள்ள சின்ன கோட்டபாளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேல். இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 37). இவரும், அதே பகுதியை சேர்ந்த தங்கராசு மனைவி மாதம்மாள் (47) என்பவரும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் 2 பெண்களும் சின்னத்தம்பிபாளையம் சென்று விட்டு பின்னர் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மல்லசமுத்திரம் அருகே கள்ளுக்கடை மேடு அருகே சின்ன கோட்டபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (40) என்பவர் மொபட்டில் வந்தார். அந்த நேரம் கேரளாவை சேர்ந்த சாவிக் (30) என்பவரும் காரில் வந்தார். அந்த சமயம் எதிர்பாராதவிதமாக காரும், மொபட்டும் மோதி கொண்டு நிற்காமல் தறிகெட்டு ஓடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மகேஸ்வரி, மாதம்மாள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார். மாதம்மாள் மற்றும மொபட்டில் வந்த பிரகாஷ் பலத்த காயத்துடன் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சாவிக் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.