கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக சகோதரர்கள் கைது நண்பர் வீட்டில் பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்தனர்
கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக தொழிலதிபர்களான சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள், நண்பர் வீட்டில் பதுங்கி இருந்தபோது போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தஞ்சாவூர்:-
கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக தொழிலதிபர்களான சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள், நண்பர் வீட்டில் பதுங்கி இருந்தபோது போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
நிதி நிறுவன சகோதரர்கள்
திருவாரூர் மாவட்டம் மறையூரைச் சேர்ந்த சகோதரர்கள் கணேஷ் (வயது 50), சுவாமிநாதன்(47). இவர்கள் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் வசித்து வருகின்றனர். கும்பகோணத்தில் நிதி நிறுவனம் மற்றும் கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை வைத்து உள்ளனர். பல்வேறு வெளிநாடுகளிலும் தொழில் செய்து வரும் இவர்கள், ஹெலிகாப்டர் வைத்து உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் ஹெலிகாப்டரை பயன்படுத்தி வந்ததால் இவர்கள் ‘ஹெலிகாப்டர் சகோதரர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.
சகோதரர்களில் கணேஷ், பாரதீய ஜனதா கட்சியின் வர்த்தக பிரிவில் பொறுப்பில் இருந்தார். இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து கணேஷ் நீக்கப்பட்டார். இவர்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஓராண்டில் இரட்டிப்பாக பணம் திருப்பித் தரப்படும் என அறிவித்து, பொதுமக்களிடம் பணம் வசூல் செய்துள்ளனர். இதற்காக ஏஜெண்டுகள் நியமித்து, அவர்களுக்கு கமிஷன் கொடுத்து உள்ளனர்.
போலீசில் புகார்
கும்பகோணம் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கானோர் சகோதரர்களின் நிதி நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். இதையடுத்து முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை முறையாக வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், உரிய காலத்தில் பணத்தை தராமல் கணேஷ்-சுவாமிநாதன் சகோதரர்கள் தலைமறைவாகி விட்டனர்.
கும்பகோணத்தை சேர்ந்த ஜபருல்லா-பைரோஸ் பானு தம்பதியினர், கணேஷ்-சுவாமிநாதன் சகோதரர்கள், ரூ.15 கோடி வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
5 பேர் கைது; 12 சொகுசு கார்கள் பறிமுதல்
இது தொடர்பாக நிதி நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர் ஸ்ரீகாந்த், கணக்காளர் மீரா(30), அவருடைய தம்பி ஸ்ரீதர்(29), நிதி நிறுவன கமிஷன் ஏஜெண்டு வெங்கடேசன்(58), கணேசின் மனைவி அகிலா(33) ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் கணேஷ் சகோதரர்கள் பயன்படுத்தி வந்த 12 சொகுசு கார்களையும் போலீசார் கடந்த வாரம் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனித்தனியே புகார் அளித்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த கணேஷ்-சுவாமிநாதன் சகோதரர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
சகோதரர்கள் கைது
இந்த நிலையில் இவர்கள் இருவரும் புதுக்கோட்டையில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், கீர்த்திவாசன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டிக்கு சென்றனர்.
அப்போது அங்கு சகோதரர்கள் இருவரும் தங்களது நண்பரான ஸ்ரீதர் என்பவரின் வீட்டில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் தஞ்சைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் இருவரையும் இரவு கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.