ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரியில் நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்ய தடை
ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரியில் நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, ஆக.6-
ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரியில் நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறப்பான ஆடி மாதம்
ஆடி மாதம் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம். ஆடி மாதம் முழுவதும் ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், வரலட்சுமி விரதம் என பெரிய விசேஷங்கள் வருவதோடு, கோவில்களில் திருவிழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களை நினைத்து விரதமிருந்து வணங்குவதற்கான மிக உகந்த நாள். இந்த நாளில் கடல், ஆறு, குளம் என நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையே கொரோனா தாக்கமும் அதிகரித்து வருகிறது. எனவே நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்ய அனுமதி வழங்கப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.
அனுமதி கிடையாது
இந்தநிலையில் புதுவையில் உள்ள புனிததலமான திருக்காஞ்சி காமாட்சி மீனாட்சி சமேத கங்கைவராக நதீஸ்வரர் தேவஸ்தான தனி அதிகாரி சீத்தாராமன் கூறுகையில், கொரோனா கட்டுப்பாடு காரணமாக அரசு தடை விதித்து இருப்பதால் சங்கராபரணி ஆற்றின் கரையில் தர்ப்பணம் செய்ய அனுமதி கிடையாது என்றார்.
இதுகுறித்து புதுச்சேரி வருவாய்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘புதுவை கடற்கரையில் தற்போது காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபயிற்சி மேற்கொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூட இன்னும் அனுமதி வழங்கவில்லை. எனவே கடற்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை’ என்றார்.
_____