முககவசம், சமூக இடைவெளி குறித்த பிரம்மாண்ட விழிப்புணர்வு கோலம்

முககவசம், சமூக இடைவெளி குறித்த பிரம்மாண்ட விழிப்புணர்வு கோலம்

Update: 2021-08-05 18:28 GMT
திருவண்ணாமலை

தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், திருவண்ணாமலை நகராட்சி ஆகியவை இணைந்து நேற்று மாலை திருவண்ணாமலை அண்ணாநுழைவு வாயில் அருகில் உள்ள ஈசான்ய மைதானத்தில் முககவசம், சமூக இடைவெளி பின்பற்றுவது குறித்தும், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், மகளிர் திட்ட இயக்குனர் சந்திரா, திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் சந்திரா வரவேற்றார். 

இதில் திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் ஈசான்ய மைதானத்தில் முககவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்து பிரம்மாண்ட விழிப்புணர்வு கோலம் வரைந்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு விழிப்புணர்வு கோலத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் ஆயுஸ் மருத்துவமனை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த விழிப்புணர்வு முகாமையும் பார்வையிட்டார்.

 தொடர்ந்து சுபசுர குடிநீர் வழங்குதல், மருத்துவக்குழுவினரின் யோகா நிகழ்ச்சி, விழிப்புணர்வு நாடகம், விழிப்புணர்வு குறும்படம் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டு பேசினார். இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட், வினோத்கண்ணன், திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, மகளிர் திட்ட உதவி  அலுவலர் ஜான்சன் மற்றும் மகளிர் குழு பெண்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்