ஆரணி அருகே 3 வீடுகளில் ரூ.25 லட்சம் நகை,பணம் கொள்ளை

ஆரணி அருகே 3 வீடுகளில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நகை,பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Update: 2021-08-05 18:24 GMT
ஆரணி,

ஆசிரியர் வீட்டில் கொள்ளை

ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கமலக்கண்ணன் (வயது 55), ஆசிரியர். இவர், குடும்பத்துடன்  திருவண்ணாமலையில் உள்ள உறவினரின் இறுதி சடங்கிற்கு சென்றார். 

பின்னர் நேற்று காலையில் வீட்டிற்கு திரும்பினார். அப்ேபாது வீட்டின் முகப்பு கதவுகளில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்கள் திறந்து கிடந்தன. மேலும் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. 

இதுகுறித்து கமலக்கண்ணன் ஆரணி நகர போலீசில் கொடுத்துள்ள புகாரில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 70 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பதாக கூறியுள்ளார். 
மற்றொரு சம்பவம்

அதே பகுதியில் உள்ள செல்வி என்பவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாண்டியன் என்பவருடைய வீட்டில் 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 
3 வீடுகளிலும் சேர்த்து ரூ.25 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளைபோன 3 வீடுகளிலும் விசாரணை நடத்தினார். 

மேலும் திருவண்ணாமலையில் இருந்து மோப்ப நாய் ‘மியாவ்’ வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்து ஆரணி-போளூர் நெடுஞ்சாலையில் சென்று நின்றது. யாரையும் ‘கவ்வி’ பிடிக்கவில்லை.

கண்காணிப்பு கேமராவில் பதிவான 2 பேர்

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது, 2 மர்ம நபர்கள் இரும்பு ராடை கொண்டு பூட்டியிருந்த வீடுகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே செல்வது தெரிந்தது. 
இந்த சம்பவம் குறித்து ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 வீடுகளில் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்