மளிகை கடையை அபிவிருத்தி செய்வதாக கூறி ரூ.2 கோடி மோசடி
விழுப்புரத்தில் மளிகை கடையை அபிவிருத்தி செய்வதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகாா் செய்யப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே ப.வில்லியனூரை சேர்ந்த கிருஷ்ணராஜ், விழுப்புரம் ரெட்டியார் மில் பகுதியை சேர்ந்த கந்தன், கோலியனூர் சரவணன், நாராயணன், சத்யபாலாஜி, விழுப்புரம் கணபதி நகர் சிவராமன், காகுப்பம் சிங்காரவேல், மாம்பழப்பட்டு சாலை சுராஜ் உள்ளிட்டோர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் மளிகை கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவரும், அவரது சகோதரரும் எங்களுக்கு நன்கு பழக்கமானவர்கள். இந்த பழக்கத்தின் அடிப்படையில் அவர்கள் இருவரும் நடத்தி வரும் மளிகை கடையை அபிவிருத்தி செய்வதற்காக எங்களிடம் கடன் கேட்டனர். நாங்கள் ஒவ்வொருவரும் ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை கடன் கொடுத்தோம். ஆனால் பல மாதங்கள் ஆகியும் எங்களுக்கு அவர்கள் இருவரும் வட்டியோ, அசலோ எதுவும் தரவில்லை. பலமுறை அவர்களிடம் சென்று பணத்தை திருப்பித்தரும்படி கேட்டதற்கு ஓரிரு மாதங்களில் தருவதாக கூறி காலம் தாழ்த்தி வந்த நிலையில் தற்போது இருவரும் அவர்களுடைய வீடு, கடையை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர். எங்களைப்போன்று பலரிடம் அவர்கள் இருவரும் சேர்ந்து ரூ.2 கோடி வரை மோசடி செய்துள்ளதாக நாங்கள் அறிகிறோம். எனவே எங்களிடம் பணத்தை மோசடி செய்த அவர்கள் இருவரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, இதுகுறித்து விசாரிப்பதாக கூறினார்.