திருப்பூர் மாவட்டத்தில் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

Update: 2021-08-05 16:51 GMT
அவினாசி, 
திருப்பூர் மாவட்டத்தில் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம்
திருப்பூர் மாவட்டம்அவினாசி தாலுகா தெக்கலூர் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் வாகனத்தை நேற்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார்.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் காணொலிக்காட்சி மூலமாக சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக அவினாசி தாலுகாவில் சேவூர், அவினாசி, நம்பியாம்பாளையம், துலுக்கமுத்தூர், திருமுருகன்பூண்டி ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 25 துணை சுகாதார நிலையங்களை சேர்ந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவத்துறை மற்ற துறைகளை ஒருங்கிணைந்து தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா தொற்று குறைந்து தினசரி பாதிப்பு 100-க்கு கீழ் வந்துள்ளது. தற்போது மக்களுக்கு அரசு மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலமாக தேவையான அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பக்கத்து மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையிலும் தமிழகத்தில் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. அனைவரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது ஒவ்வொருவரின் கடமையாகும். அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கினாலும் நாம் ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாட்டை பின்பற்றவேண்டும்.
2 மாதங்களுக்கு மாத்திரைகள்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது வருமுன் காப்போம் திட்டத்தை ஏற்படுத்தி மருத்துவமனையில் மட்டும் டாக்டர்கள் சிகிச்சை அளிக்காமல் ஆங்காங்கே கடைக்கோடி கிராமங்களுக்கும் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அந்த திட்டம் தற்போதைய திட்டத்துக்கு பொருத்தமாக உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அவினாசி வட்டாரத்தில் முதல்கட்டமாக 3,192 பேர் பயன்பெற உள்ளனர். இந்த திட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று சுகாதார பெண் களப்பணியாளர்கள் மூலம் 2 மாதங்களுக்கு தேவையான மாத்திரைகள் கொடுக்கப்பட உள்ளன.
படுத்த படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவம், நோய் தடுப்பு பராமரிப்பு செவிலியர் மற்றும் இயன்முறை மருத்துவ சிகிச்சையாளர் மூலம் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சுகாதாரப்பணியாளர்கள் துணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ்குமார், அவினாசி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்திவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிவாரண பொருட்கள்
பின்னர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவுநாளை முன்னிட்டு அவினாசி அருகே காசிகவுண்டன்புதூரில் கோவில் அர்ச்சர்கள், பணியாளர்கள், கிராம கோவில் பூசாரிகள், வேலாயுதம்பாளையம் ஊராட்சி மன்ற பணியாளர்கள் உள்ளிட்ட 200 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்மநாபன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் செல்வரங்கம், இலக்கிய அணி தலைவர் ராயப்பா, செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றிய பொறுப்பாளர் சிவப்பிரகாஷ், திராவிட வசந்தன், பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நம்பி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்