ராமநத்தம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
ராமநத்தம் அருகே முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநத்தம்,
ராமநத்தம் அடுத்த எழுத்தூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் எழுத்தூர் ஊராட்சியில் 2-வது வார்டில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த 10 நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. மேலும் மின்சாரமும் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எழுத்தூரில் இருந்து ஒரங்கூர் செல்லும் சாலையில் கற்களை வைத்தும் காலி குடங்களுடனும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முறையாக குடிநீர் மற்றும் மின்சார வினியோகம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.