தந்தை-மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய தந்தை-மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2021-08-05 14:32 GMT
தூத்துக்குடி:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு இடத்தை தேர்வு செய்வதற்காக தொல்லியல் துறை இயக்குனர் ஆதிச்சநல்லூர் பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது ஆதிச்சநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் லூர்துபிரான்சிஸ் அரசு புறம்போக்கு நிலங்களை காண்பித்தாராம். அதிகாரிகள் சென்ற பிறகு, பாளையங்கோட்டை ரஹ்மத் நகர் பகுதியைச் சேர்ந்த நங்கையப்பன் மகன் கொம்பையா (வயது 49), அவரது மகன் மணிகண்டன் (23) ஆகிய 2 பேரும் ஆதிச்சநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சென்று உள்ளனர். அங்கு இருந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்துபிரான்சிஸிடம், நாங்கள் அனுபவித்து வரும் இடத்தை அருங்காட்சியம் அமைப்பதற்கு அதிகாரிகளிடம் எப்படி காட்டலாம் என்று கூறி தாக்கி உள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொம்பையா, மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கொம்பையா, மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.

மேலும் செய்திகள்