மண் வளத்தை மீட்டெடுக்காவிட்டால் 20 ஆண்டுகளில் பெரும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் ஜக்கிவாசுதேவ் பேச்சு

மண் வளத்தை மீட்டெடுக்கா விட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் பெரும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என ஜக்கிவாசுதேவ் கூறியுள்ளார்.

Update: 2021-08-05 12:14 GMT
சென்னை,

நதிகளை மீட்போம் இயக்கம் மற்றும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களின் கூட்டம் பெங்களூருவில் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கிவாசுதேவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

மண்வளம்

விவசாயம் நல்ல படியாக நடப்பதற்கும், நல்ல மகசூல் எடுப்பதற்கும் மண்ணில் குறைந்தப்பட்சம் 4 முதல் 6 சதவீதம் கரிம வளம் இருக்க வேண்டும். ஆனால், தற்போது இந்தியாவில் இருக்கும் மொத்த விவசாய நிலங்களில் 42 சதவீத மண்ணில் கரிம வள அளவு அரை சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இது மிகப்பெரிய பேரழிவாகும்.

ஒரு காலத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் நாட்டிலேயே செழிப்பான விவசாயிகளாக போற்றப்பட்டனர். அவர்கள் ஆண்டுக்கு 4 முறை பயிர் அறுவடை செய்து வந்தனர். ஆனால், தற்போது ஒரு முறை மட்டுமே அறுவடை செய்கின்றனர். இதற்கு காரணம், வருடத்தின் 5 மாதங்கள் காவிரி நீர் டெல்டா பகுதியை அடைவதே இல்லை. பலரும் மண் வளம் குன்றுவதையும், அதனால் ஏற்பட்டு வரும் பேரழிவுகளின் பாதிப்பையும் அறியாமல் இருக்கின்றனர்.

உணவு தட்டுப்பாடு

மண் வளத்தை மீட்டெடுக்க விவசாயிகளின் ஒத்துழைப்பு அவசியம். மண் வளத்தை மீட்டெடுக்காவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் உணவு தட்டுப்பாடு ஏற்படும். காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் விவசாயிகளை மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாற்றி வருகிறோம்.

இது ஒரு புதிய பரிசோதனை அல்ல. ஏற்கனவே ஈஷாவின் 20 ஆண்டு கால களப்பணியால் சுமார் 1 லட்சம் விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறி உள்ளனர். அதன்மூலம் மண் வளம் மேம்படுவதும் விவசாயிகளின் பொருளாதாரம் அதிகரித்து இருப்பதும் கண்கூடாக நிரூபணமாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் பேசுகையில், “காவேரி கூக்குரல் திட்டம் வெற்றி பெற்றால், அது ஒட்டுமொத்த உலகிற்கே முன்மாதிரி திட்டமாக மாறும்” என்றார்.

மர நண்பர்கள்

காவேரி கூக்குரல் இயக்கமானது கர்நாடகாவில் காவேரி நதிப்படுகையில் அமைந்துள்ள 9 மாவட்ட விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயத்தில் ஈடுபடுத்த தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இதற்காக ‘மர நண்பர்கள்’ என்ற பெயரில் 890 தன்னார்வலர்களை இவ்வியக்கம் நியமித்துள்ளது.

மேலும் செய்திகள்