குமரி-கேரள எல்லையை பிரிக்கும் பணி

சூழால் பஞ்சாயத்தில் குமரி-கேரள எல்லையை பிரிக்கும் பணி அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.

Update: 2021-08-04 21:47 GMT
கொல்லங்கோடு:
சூழால் பஞ்சாயத்தில் குமரி-கேரள எல்லையை பிரிக்கும் பணி அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.
எல்லை பிரச்சினை
கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் பிரிந்து தமிழகத்தோடு இணைந்து 66 ஆண்டுகள் முடியும் நிலையில், குமரி மாவட்ட எல்லை பகுதிகள் வரையறை செய்யப்பட்டு பிரிக்கப்பட்டன.
இந்த நிலையில் கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியான சங்குருட்டியில் இருந்து காரோடு செல்லும் சாலையில், சூழால் பஞ்சாயத்து சார்பில் போடப்பட்டிருந்த கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் லைன்களை கேரள அரசு மூடி காங்கிரீட் அமைத்தனர். இதனால் குமரி பகுதியில் உள்ள மக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் குழாயில் அடைப்புகளோ, உடைப்போ ஏற்பட்டால், அதனை சீரமைக்க முடியாமலும், புதிய திட்டங்களை அமல்படுத்த முடியாத நிலையும் இருந்து வந்தது. 
அதிகாரிகள்
இது சம்பந்தமாக தமிழக மக்கள் சூழால் பஞ்சாயத்து தலைவர் இவான்சிடம் கூறினார்கள். அவர் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அரசு உத்தரவிட்டதின் பேரில், மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆலோசனையின்படி, கிள்ளியூர் தாசில்தார் ஜூலியன், கேரள வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அதைத்தொடர்ந்து இரு மாநில எல்லை பகுதிகளையும் அளந்து பிரித்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று தாசில்தார் ஜூலியன் மற்றும் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை தாசில்தார் முரளி ஆகியோர் முன்னிலையில் சர்வேயர் மூலம் நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லை பகுதியை பிரிக்கும் பணி நடந்தது. அப்போது சூழால் பஞ்சாயத்து தலைவர் இவான்ஸ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், காரோடு பஞ்சாயத்து நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதன் காரணமாக பல ஆண்டுகளாக நிலவி வந்த எல்லை பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்