வார இறுதிநாட்களில் குக்கே சுப்பிரமணியா, கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோவில்களுக்கு வர பக்தர்களுக்கு தடை
கொரோனா பரவல் எதிரொலியால் பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியா, கட்டீல் துர்கா பரமேஸ்வரி, தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில்களுக்கு வார இறுதிநாட்களில் வர பக்தர்களுக்கு தடை விதித்து கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டு உள்ளார்.
மங்களூரு: கொரோனா பரவல் எதிரொலியால் பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியா, கட்டீல் துர்கா பரமேஸ்வரி, தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில்களுக்கு வார இறுதிநாட்களில் வர பக்தர்களுக்கு தடை விதித்து கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டு உள்ளார்.
கேரளாவில் தொற்று அதிகரிப்பு
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்களுக்கு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியா, கட்டீல் துர்கா பரமேஸ்வரி, தர்மஸ்தலா மஞ்சுநாதர் உள்ளிட்ட கோவில்கள் உள்ளது.
இந்த கோவில்களுக்கு, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அவர்களால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் கே.வி.ராஜேந்திரா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பக்தர்களுக்கு தடை
கொரோனா தொற்று காரணமாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களான குக்கே சுப்பிரமணியா, தர்மஸ்தலா மஞ்சுநாதர் மற்றும் கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோவில்களுக்கு வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் வர தடை விதிக்கப்படுகிறது. ஆனால் வழக்கம்போல் கோவில்களில் பூஜை நடைபெறும். அதேபோல் கோவில்களில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்கள் 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கோவில்களில் பிரசாதம், அன்னதானம் வழங்குவது நிறுத்தி வைக்கப்படுகிறது. 3 கோவில்களிலும் மற்ற நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருந்தது.