திருச்சி காந்திமார்க்கெட் அருகே குடோனில் பதுக்கிய ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்

திருச்சி காந்திமார்க்கெட் அருகே குடோனில் பதுக்கிய ரூ.1 லட்சம் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-08-04 20:40 GMT
திருச்சி,
திருச்சி காந்திமார்க்கெட் அருகே குடோனில் பதுக்கிய ரூ.1 லட்சம் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குடோன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

குடோனில் சோதனை 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் தனிப்படை போலீசாருக்கு காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு குடோனில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று காலை காந்திமார்க்கெட் சவுராஷ்டிராதெருவில் உள்ள ஒரு குடோனில் தனிப்படை போலீசார் திடீரென சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 8 மூட்டைகளில் 26 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல் 

உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது தொடர்பாககாந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருச்சி பெரியகடைவீதியை சேர்ந்த அமர் ஏஜென்சிஸ்குடோன் உரிமையாளர் ஹரீஷ்குமார் (வயது 26) என்பவரை கைது செய்தனர். 
மேலும் ரூ.1 லட்சம் மதிப்பு குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, குடோன் உரிமையாளரை கைது செய்த தனிப்படை போலீசாரை கமிஷனர் பாராட்டினார். அத்துடன் திருச்சி மாநகரில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்