கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் ரூ1 கோடியில் புதிய மின்மாற்றி
கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் ரூ 1 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியை விழுப்புரம் தலைமை பொறியாளர் பெட்ராண்ட்ரஸ்சல் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி
புதிய மின்மாற்றி
கள்ளக்குறிச்சி துணைமின் நிலையத்தில் ஏற்கனவே 16 மெகா வோல்ட் திறன் கொண்ட 2 மின்மாற்றிகள் உள்ளன. இதன் மூலம் வழங்கப்படும் மின்சாரம் சில நேரங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தேவைகளுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.
எனவே மின்பற்றாக்குறை போக்கிடும் வகையிலும், எதிர் காலத்தில் மின்சாரம் தேவையை கருத்தில் கொண்டும் 16 மெகா வோல்ட் திறன் கொண்ட ஒரு மின் மாற்றியை அகற்றி விட்டு அதற்கு பதிலாக தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் 25 மெகா வோல்ட் ஆம்பியர் திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் தலைமை பொறியாளர் பெட்ராண்ட்ரஸ்சல் கலந்துகொண்டு புதிய மின்மாற்றியை பொது மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
மின் தட்டுப்பாடு நிவர்த்தி
இதன் மூலம் கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் ஏமப்பேர், சர்க்கரை ஆலை, அக்கராயப்பாளையம் உள்ளிட்ட 17 கிராமங்களின் மின் தட்டுப்பாடு குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், அருகில் உள்ள துணை மின் நிலையங்களில் பழுது ஏற்பட்டால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மேற்பார்வை பொறியாளர் அருட்பெருஞ்ஜோதி, கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் (பொது) முருகேசன், செயற்பொறியாளர்கள் கணேசன், மகேந்திரன், சுப்புராஜ், உதவி செயற்பொறியாளர் ராஜா, குமரேசன், சுரேஷ்குமார், கோபிநாத், மோகன், உதவி மின் பொறியாளர் சிந்துபைரவி மற்றும் பொறியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.