மாமன்னர் வல்வில்ஒரி விளம்பர பேனரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியல்
நொய்யல் அருகே வைக்கப்பட்டிருந்த கொல்லிமலை மாமன்னர் வல்வில்ஒரி விளம்பர பேனரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நொய்யல்
விளம்பர பேனர் சேதம்
கொல்லிமலை மாமன்னர் வல்வில்ஒரி நினைவு நாளையொட்டி நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நொய்யல் புன்னம் சத்திரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கொல்லிமலை மாமன்னர் வல்வில்ஒரி விளம்பர பேனரை மர்மநபர்கள் கிளித்து சேதப்படுத்தி ள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த முக்கிய பிரமுகர்கள் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
சாலை மறியல்
பின்னர் பேனர்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று மாலை நொய்யல் அருகே புன்னசத்திரம் பகுதியில் உள்ள கரூர் -ஈரோடு நெடுஞ்சாலையில் கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் முனுசாமி கவுண்டர் தலைமையில், புதிய திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சந்தோஷ், கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராக்கி முருகேசன், கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் சின்ன கவுண்டர் மற்றும் அந்த அமைப்புகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ் செல்வன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பேனரை சேதப்படுத்திய மர்ம நபர்களை 48 மணி நேரத்தில் கைது செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீசார் னிப்படை அமைத்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் நேற்றுமுன்தினம் பேனர் இருந்த இடம் வழியாக சென்ற ஒரு சரக்கு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.