காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

அதியமான் கோட்டை பகுதியில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-04 17:09 GMT
நொய்யல்
காதல் திருமணம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களது மகள் கவிப்பிரியா (வயது 20). இவர் திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே அதியமான் கோட்டையை சேர்ந்த ராஜகோபால் மகன் மணிகண்டன் என்பவரை கவிப்பிரியா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்ததம்பதிக்கு 11 மாதமான இனியாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
வரதட்சணை கேட்டு...
இந்தநிலையில் திருமணம் செய்து கொண்டே சில நாட்களில் இருந்தே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.  இந்நிலையில் மணிகண்டனின் அக்கா சாந்தி, சரண்யா, சவுந்தர்யா மற்றும் மணிகண்டனின் தாயார் ராணி, அவரது தந்தை ராஜகோபால் ஆகியோர் கவிப்பிரியாவிடம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.       இதுகுறித்து கவிப்பிரியா தனது தாய் முத்துலட்சுமியிடம் கூறியுள்ளார். அதற்கு முத்துலட்சுமி தான் கூலி வேலை செய்து சீர்வரிசை தருகிறேன் என்று கூறியுள்ளார். 
தூக்குப்போட்டு தற்கொலை
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை மணிகண்டனின் தந்தை ராஜகோபால் முத்துலட்சுமியின் 2-வது மகள் நிர்மலாவுக்கு போன் செய்து கவிப்பிரியா தூக்குபோட்டு தற்கொலை செய்து  கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த முத்துலட்சுமி மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று கவிப்பிரியாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். 
இதுகுறித்து கவிபிரியாவின் தாய் முத்துலட்சுமி தனது மகளுக்கு மணிகண்டன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வரதட்சணை கொடுமை செய்துள்ளதாகவும், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்