கண்ணமங்கலம் அருகே; பெண் வெட்டிக்கொலை
கண்ணமங்கலம் அருகே வயல்ெவளிக்குச் சென்ற பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே வயல்ெவளிக்குச் சென்ற பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
வீடு திரும்பவில்லை
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் பஜனை கோவில் தெருவில் வசித்தவர் இருசப்பன். இவரின் மனைவி சாந்தி (வயது 45).
இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக தனது மகளிடம் கூறி விட்டு கிராமத்துக்கு அருகில் உள்ள வயல் வெளிக்குச் சென்றுள்ளார். இரவு வெகு நேரம் ஆகியும் சாந்தி வீடு திரும்பவில்லை. இதனால் தீபா வீட்டிலேயே அழுதபடி இருந்தார்.
நேற்று அதிகாலை வயல்வெளிக்குச் சென்ற ஒருவர், சாந்தி வயல்வெளியில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர், சாந்தியின் மகள் தீபாவுக்கும், அவரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார். மேலும் கண்ணமங்கலம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
செங்கல் சூளைக்கு ஓடிய மோப்பநாய்
தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்டு கிடந்த சாந்தியின் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர் சுந்தர்ராஜன், தடய அறிவியல் நிபுணர் ஜேம்ஸ் ஆகியோர் சம்பவ இடத்தில் கைரேகை, தடயங்களை பதிவு செய்தனர்.
துப்பறியும் நாய் ‘மியா’ சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது, பிணம் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி அருகில் இருந்த செங்கல் சூளை மற்றும் புளியமரம் பகுதியில் சுற்றி ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
காரணம் என்ன?
இதுபற்றி கொலை செய்யப்பட்ட சாந்தியின் சகோதரர் கீழ்அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை கொலை செய்த நபர் யார்?, அவர் உள்ளூர் நபரா?, வெளியூர் நபரா?, முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா?, வேறு ஏதேனும் காரணமா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாந்தியின் கணவர் இருசப்பன் 2006-ம் ஆண்டு உடல் நலப் பாதிப்பால் இறந்து விட்டார். அவருக்கு தீபா (15) என்ற ஒரேஒரு மகள் உள்ளார்.
தீபா ஒண்ணுபுரம் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். தந்தையை இழந்த சோகத்தில் தாயாருடன் வசித்து வந்த தீபா, தற்போது தாயை இழந்து அனாதையாகி விட்டார். அவர், தனது தாயாரின் பிணத்தைப் பார்த்து கதறி அழுதது கல்ெநஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.