வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் பஸ் டிரைவர், என்ஜினீயர் பலி 3 பேர் படுகாயம்
தொப்பூர், காரிமங்கலம் பகுதிகளில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் பஸ் டிரைவர், என்ஜினீயர் ஆகியோர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
காரிமங்கலம்:
தொப்பூர், காரிமங்கலம் பகுதிகளில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் பஸ் டிரைவர், என்ஜினீயர் ஆகியோர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள எட்டியானூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 37). தனியார் பள்ளி பஸ் டிரைவர். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். செல்வம் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் காரிமங்கலத்தில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது கெங்குசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சசிகுமார், முனியப்பன் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் பாலக்கோட்டில் இருந்து காரிமங்கலம் நோக்கி வந்தனர்.
கெட்டூர்மேடு என்ற இடத்தில் வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சசிகுமார், முனியப்பன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ஜினீயர்
நல்லம்பள்ளி அருகே உள்ள ஒசஅள்ளிபுதூரை சேர்ந்தவர் மகேந்திரன் (24). பி.இ. என்ஜினீயர் இவர் நேற்று முன்தினம் தொம்பரகாம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். பின்னர் அதே ஊரை சேர்ந்த தனது நண்பர் அருண்குமார் (22) என்பவருடன் மகேந்திரன் மோட்டார் சைக்கிளில் சென்றார். தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் சென்றபோது சாலையோர தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி அங்குள்ள 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் மகேந்திரன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அருண்குமார் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.