போலீஸ் வேலைக்கான உடல் தகுதி தேர்வில் திருநங்கை தீபிகா வெற்றி

போலீஸ் வேலைக்கான உடல் தகுதி தேர்வில் திருநங்கை தீபிகா வெற்றி வாகை சூடினார்.

Update: 2021-08-04 14:15 GMT
சென்னை,

தமிழக போலீஸ்துறையில் ஆண்-பெண் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறையில் 2-ம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் போன்ற பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் 20 மையங்களில் நடந்து வருகிறது. சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை வரை ஆண்களுக்கு மட்டும் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

நேற்று 2-வது நாளாக பெண்கள் கலந்து கொண்ட ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வு நடந்தது. நேற்றைய தேர்விலும் 500 பெண்கள் பங்கேற்றனர். அதில் கர்ப்பமாக இருந்த 4 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் குழந்தை பெற்று உடல் நலமான பிறகு, தனியாக அவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

திருநங்கை வெற்றி

பெண்களுக்கான ஆரம்பகட்ட உடல் தகுதி தேர்வில் திருநங்கை தீபிகா (வயது 27) பங்கேற்றார். அவர் அதில் வெற்றி வாகை சூடினார். அவர் கூறுகையில், போலீஸ் வேலைக்கு சேருவது எனது கனவு என்று தெரிவித்தார். ஏற்கனவே 3 முறை போலீஸ் தேர்வில் வெற்றி கிட்டவில்லை. இந்த முறை கண்டிப்பாக தேர்வு பெறுவேன் என்று அவர் உறுதிபட கூறினார்.

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி இவரது சொந்த ஊர். 10-வது வகுப்பு வரை படித்துள்ளார். இவரது தந்தை இருளப்பன் கூலி தொழிலாளி. தாயார் முத்துலட்சுமி. ஒரு சகோதரன், ஒரு சகோதரி உள்ளனர்.

இவர் 2-வது கட்ட உடல் தகுதி தேர்வை வரும் திங்கட்கிழமை சந்திக்க உள்ளார். தமிழக போலீஸ்துறையில் ஏற்கனவே 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 திருநங்கைகள் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்