சிறு, குறு விவசாய நிறுவனங்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
சிறு, குறு விவசாய நிறுவனங்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை உட்கட்டமைப்புக்கான நிதியின் கீழ் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாய நிறுவனங்கள் கடன் பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கடன் திட்டம்
விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை வீணாகாமல் கிராம அளவில் ஒன்று சேர்ந்து மதிப்புக்கூட்டி, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கும், வேளாண் வளர்ச்சிக்கும் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும்.
அதன்படி வேளாண் உட்கட்டமைப்புக்கான நிதியின் கீழ் கடன் வசதித்திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், அறுவடைக்கு பின் வேளாண்மைக்கான உட்கட்டமைப்புகளுக்கும், சமுதாய வேளாண் அமைப்புக்கும் தேவைப்படும் முதலீடுகளுக்கு நடுத்தர மற்றும் நீண்ட கால கடனுக்கு வட்டி தள்ளுபடி மற்றும் கடனுக்கான உத்தரவாதம் போன்ற வசதிகள் செய்து தரப்படும். இந்த திட்டம், 2020-21 முதல் 2029-30-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும்.
தகுதிகள்
இந்த திட்டத்தின் கீழ், மின் சந்தையுடன் கூடிய வினியோக தொடர் சேவை, சேமிப்புக்கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைப்பொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்புகள், தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்துவதற்கான எந்திரங்கள், குளிர்பதன வசதிகள், போக்குவரத்து வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள் மற்றும் பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள் போன்ற பல்வேறு அறுவடைக்குப்பின் வேளாண்மைக்கான உட்கட்டமைப்புகள், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன மற்றும் துல்லிய பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள், பகுதிக்கேற்ற பயிர் தொகுப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துதல், அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கு கடன் வசதி பெறமுடியும்.
மேற்காணும் உட்கட்டமைப்புகளை உருவாக்க முன்வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் கூட்டுப் பொறுப்பு குழு, பல்வகை கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில்முனைவோர், புதியதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்களுக்கும், மத்திய, மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகளுக்கும் கடன் வசதி செய்து தரப்படும்.
விவசாய நிறுவனங்கள்
இந்த திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை பெறும் கடனுக்கு 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டிற்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி, சிறு மற்றும் குறு விவசாய நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 கோடி கடனை பெறுவதற்கு அரசே கடன் உத்திரவாதம் அளிப்பது போன்ற வசதிகள் செய்து தரப்படும்.
அரசு அறிவித்து உள்ள இந்த வேளாண் உட்கட்டமைப்புகளுக்கான கடன் வசதியின் மூலம் வேளாண் விளைபொருட்கள் வீணாகாமல், சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் வகையில் கிராமப்புறங்களில் பல்வேறு உட்கட்டமைப்புகளை உருவாக்க இயலும்.
இந்த கடன் வசதியை பெற விரும்பும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், தனியார் தொழில் முனைவோர்கள் தங்கள் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள், நபார்டு வங்கி மேலாளர்கள் அல்லது வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை போன்ற துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.